search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    ரஜினிக்கு எதிரான போராட்டம்: குஷ்பு கடும் கண்டனம்

    பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது, அவரது வீட்டு முன்பு இடைஞ்சல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக ஒரு மாபெரும் நடிகரான ரஜினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் வேண்டுமென்றே நடத்தப்படுவது தெளிவாக தெரிகிறது.

    ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் அவரது கருத்தை தெரிவிப்பதும் இது முதல் முறையல்ல. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு போன்றோர் கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

    அதற்காக அவரை பா.ஜனதா கட்சிக்காரர் என்றோ, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்றோ சொல்லமுடியாது. அவர் அரசியலுக்கு வரட்டும் அதன்பிறகு அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

    இப்போது அவர் துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்து இருக்கிறார். அப்போது அவர் பேசியது மூன்று, நான்கு நாட்கள் கழித்து இவ்வளவு பூதாகரமாக்கப்பட என்ன காரணம்?

    ரஜினியை பொறுத்த வரை மிகப்பெரிய நடிகர். ஜனநாயக நாட்டில் அவரது கருத்துகளை தெரிவிக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அவரது கருத்து பிடிக்கவில்லையா? அதற்கும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

    அதைவிட்டு விட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவது. அவரது வீட்டு முன்பு சென்று இடைஞ்சல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடும் கண்டனத்துக்குரியது.

    இந்த நேரத்தில் பெரியார் இருந்திருந்தால் கூட இந்த மாதிரி போராட்டங்களை நிச்சயமாக ஏற்கமாட்டார். அவர் மீது ஒற்றை செருப்பை வீசியவர்களை கூட மற்றொரு செருப்பை வைத்து என்ன செய்யப் போகிறார்? அதையும் வீசு. நானாவது பயன்படுத்திக் கொள்கிறேன் என்றவர்.

    அவரது பெயரால் அவர் விரும்பாததை செய்வது பெரியாருக்கு பெருமை சேர்க்காது. ரஜினியை தவிர வேறு யாராவது இந்த தகவலை தெரிவித்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்க மாட்டார்கள்.

    முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பெரியாரை பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். பெரியாரை புகழ்பவர்கள் தங்கள் தலையில் ஒன்றும் இல்லை என்பதை உணராதவர்கள். அவரை மிகப்பெரிய ஆள் மாதிரி சித்தரிக்கிறார்கள். ஆனால் பெரியார் ஆங்கிலேயருக்கு ஏஜென்டாக இருந்தவர்.

    ரஜினிகாந்த்

    ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு அதற்கேற்ற மாதிரி சட்ட திட்டங்களை உருவாக்கினார்கள். அதேபோல் பெரியார் என்னவாக இருந்தாலும் அவர்களுக்கு ஒத்துப்போனார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி சட்டம் தெரிந்தவர். அவரையும் சட்ட ரீதியாக சந்திப்பார்களா? அவரை மன்னிப்பு கேட்க சொல்வார்களா? இல்லை. அவரது வீட்டைத்தான் முற்றுகையிடுவார்களா?

    ரஜினிக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது சரியா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×