search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயம்
    X
    விவசாயம்

    வேளாண் மக்கள் பயனடைய உழவன் செயலியில் புதிய 3 சேவைகள்

    விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க பண்ணை வழிகாட்டி, இயற்கைப் பண்ணையம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற மூன்று சேவைகள் உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான முக்கிய தகவல்களை கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக, சென்ற ஆண்டில் “உழவன்” கைபேசி செயலியினை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5 லட்சம் பயனாளிகள் இச்செயலியினை பயன்படுத்தி வருகின்றனர்.

    வேளாண்மை மற்றும் இதர சகோதரத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டு, இதுவரை 88,987 விவசாயிகள் உயர் மதிப்புள்ள இடுபொருட்களை மானியத்தில் பெறும் பொருட்டு இந்த செயலியின் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ்தகுதியான விவசாயிகள் தாங்களாகவே மத்திய அரசின் பி.எம். கிசான் வலைதளத்தில் பதிவு செய்து திட்ட பலன்களை எளிதாக பெறுவதற்கான சேவை சென்ற வாரத்தில் உழவன் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தற்போது, கூடுதலாக, எனது பண்ணை வழிகாட்டி, இயற்கைப் பண்ணையம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற மூன்று சேவைகள் உழவன் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் உழவன் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் மதிப்புகூட்டிய பொருட்களின் தரம், அளவு, விலை போன்ற விவரங்களை புகைப்படத்துடன் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து சந்தைப்படுத்தி கொள்ளலாம்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டிய பொருட்களை வாங்க விரும்பும் பொதுமக்கள் இச்செயலி மூலம் தங்களுக்குத் தேவையான பொருட்களை தரமாகவும் குறைந்த விலையிலும் பெற்றுக் கொள்ளலாம்.

    புதிதாக இந்த உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய விரும்பும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உங்கள் பகுதியில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.

    தற்போது, உழவன் கைபேசி செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூன்று சேவைகள் மூலம், வேளாண் பெருமக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×