search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்விலாஸ் பஸ்வான்
    X
    ராம்விலாஸ் பஸ்வான்

    நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு: ஜூன் 1-ந்தேதி அமல் - மத்திய மந்திரி பஸ்வான் அறிவிப்பு

    நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
    பாட்னா:

    பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பிறகு “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ரேசன் பொருட்களுக்காக முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 2020-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடந்த மாதம் 3-ந்தேதி கூறி இருந்தார்.

    புத்தாண்டு தினமான கடந்த 1-ந்தேதி 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
    ஆந்திரா, அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மராட்டியம், திரிபுரா, குஜராத், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுகிறது.
    நாடு முழுவதும் ஜூன் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாயவிலை கடைகளில் அமல்படுத்தப்படும்.

    ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பலன் அடைய முடியும். பணி நிமித்தமாக நாட்டின் எந்த பகுதிக்கு தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தாலும் ரேசன் பொருட்களை வாங்க முடியும்.
    இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

    “ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்” தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த திட்டம் மூலம் கூடுதல் பயனாளிகள் பயன் பெறுவார்கள்.
    Next Story
    ×