search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது

    கோவை அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை அருகே உள்ள பி.என். பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது காட்டூர் விவேகானந்தா ரோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (27) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மோகன்ராஜ், ராஜ்குமாரிடம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் பணம், படிப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போட்டை பெற்றுக்கொண்டார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ராஜ்குமாரை வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்று பணத்தையும், சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மோகன்ராஜ் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    பின்னர் ராஜ்குமார் இது குறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் பணத்தை பெற்று மோசடி செய்த மோகன்ராஜை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×