search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மேச்சேரி அருகே தொழில் அதிபர் படுகொலை

    மேச்சேரி அருகே நள்ளிரவில் ரோட்டோரம் தொழில் அதிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே காமனேரியிலிருந்து கோவிலூர் செல்லும் பகுதியில் வெள்ளையன் காட்டு வளவு கொண்டமுத்தான் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள கிராம சாலையில் நள்ளிரவு சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவருடைய முகத்தில் பலத்த காயங்கள் இருந்தது.

    இந்த தகவல் சாத்தப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் மாதேஸ்வரனுக்கு கிடைத்தது. அவர், உடனடியாக இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தனுக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், உதவியாளர் மாதேஸ்வரன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், மேச்சேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை பார்த்தனர். அவரை கத்தியால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. நெற்றியிலும் இடது கண்ணத்திலும் இடது மார்புக்கு கீழும், கழுத்து பகுதியை சுற்றிலும் காயங்கள் இருந்தது.

    சம்பவ இடத்திற்கு சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதேபோல் துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது சிறிது தூரம் வரை ஓடி விட்டு நின்று கொண்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள், உடைந்த நம்பர் பிளேட், ஹெல்மெட், செல்போன், ஆதார்கார்டு, ஒர்ஜினல் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை சிதறி கிடந்தது. அவர் அணிந்திருந்த வாட்ச் உடைந்து கிடந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதில் ஆதார் கார்டு மற்றும் ஒர்ஜினல் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வைத்து, கொலையுண்ட அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்து.

    அவர், காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம், கம்பர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 62) என்பவர் என்பதும் தொழில் அதிபரான இவர் சேலத்தில் சுமார் 25 வருடங்களாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையுண்ட பாலசுப்பிரமணியம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    பாலசுப்பிரமணியம் பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் குடும்பத்தினரை பிரிந்து சேலத்திற்கு வந்தார். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள மைனுதீன் என்பவர் வீட்டில் குடும்ப நண்பராக தங்கியிருந்த இவர் கிராணைட் அறுக்கும் எந்திரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    மேலும், 5 ரோட்டில் உள்ள சிப்காட்டில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஜல்லி கிரசர் தயாரிக்கும் மிஷினுக்கு தேவையான உதிரிப்பாகம் சப்ளை செய்தும், சர்வீஸ் செய்தும் வந்தார். அது தொடர்பான அலுவலகமும் சேலம் 5 ரோடு பகுதியில் செயல்பட்டு வந்தது.

    இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஒரு தனியார் டிரஸ்டுட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவர், ஜலகண்டாபுரம் அருகே உள்ள அமராவதி அம்மன் கோவிலுக்கு செல்வதையும் கொண்டிருந்தார்.

    மைனுதீன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் பாலசுப்ரமணியம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளியில் தங்குவதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களிலும் கத்தி குத்து மற்றும் வெட்டு காயங்களுடன் மேச்சேரி அருகே பாலசுப்ரமணியம் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இதனால் அவரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.

    சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மைனுதீனுக்கு சொந்தமானது என்பதும், இந்த மோட்டார் சைக்கிளை பாலசுப்பிரமணியம் பயன்படுத்தி வந்தார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எனவே இதுபற்றியும், டிரஸ்டுக்கு அடிக்கடி பாலசுப்பிரமணியம் செல்வதால் அந்த டிரஸ்ட் பற்றியும் கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×