search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால்
    X
    பால்

    தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்ந்தது

    தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது. பால் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல், டீ கடைகளில் டீ, காபி விலை உயர வாய்ப்புள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பால் விற்பனையில் தனியார் பங்கு அதிகமாக உள்ளன. ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், டோட்லா, திருமலா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களின் பால்தான் ஓட்டல்கள், டீக்கடைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆவின் நிறுவனத்தின் பால் அரசு ஆஸ்பத்திரிகள், மாதாந்திர பால் அட்டைதாரர்கள், பால் விற்பனை மையங்கள் மற்றும் பெட்டிகடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை பயன்படுத்துவதால் அத்தியாவசிய பொருளாக பால் கருதப்படுகிறது.

    தனியார் பாலைவிட ஆவின் பாலுக்கு எப்போதும் மவுசு அதிகம். குழந்தைகளுக்கு ஆவின் பால்தான் பொதுவாக கொடுக்கப்படுகிறது. ஆவின் பால் விலை தனியார் பாலைவிட விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனே விற்பனை ஆகிவிடுகிறது.

    இந்த நிலையில் தனியார் பால் விலையை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்தன. அதன்படி இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், எஸ்.கே.ஏ. ஆகிய நிறுவனங்களின் பால் விலை உயர்ந்துள்ளது.

    டோட்லா, திருமலா உள்ளிட்ட மற்ற பால் விலை நாளை முதல் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பால் கொள்முதல் குறைவு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    முழு கொழுப்பு சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.58 ஆகவும் அரை லிட்டர் ரூ.27-ல் இருந்து ரூ.29 ஆகவும் 175 மில்லி ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48 ல் இருந்து ரூ.52 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.26 ஆகவும், 200 மில்லி ரூ.10 ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ22-ல் இருந்து ஒரு ரூபாய் கூடி ரூ.23 ஆகவும், 200 மில்லி ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் 250 மில்லி ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தயிர் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும், அரை லிட்டர் ரூ.26-ல் இருந்து ரூ.28 ஆகவும், 180 கிராம் பாக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், 100 கிராம கப் ரூ.10 ல் இருந்து ரூ.12 ஆகவும், 200 கிராம் கப் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும் அதிகரித்துள்ளது.

    டோட்லா பால் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது. ரூ.62 ஆகவும், அரை லிட்டர் ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.28 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    தயிர் ஒரு லிட்டர் ரூ.60 ஆகவும், அரை லிட்டர் ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது.

    ஆரோக்கியா நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும், அரை லிட்டர் ரூ.30-ல் இருந்து ரூ.31 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.49 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

    திருமலா பால், ராஜ்பால் விலை உயர்வு 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து தனியார் பால் விலையும் உயர்வதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கூலி, மாத சம்பளம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாதாந்திர செலவினம் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளனர்.

    டீ, காபி

    பால் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல், டீ கடைகளில் டீ, காபி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டீ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதை விட அதிகரித்தால் விற்பனை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பால் விலை உயர்வு குறித்து வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த வக்கீல் தாமரை செல்வி கூறியதாவது:-

    தனியார் பால் விலையை ஆண்டுக்கு 3, 4 முறை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால் விற்பனையை மட்டும் உயர்த்துவது முறையல்ல. பால் விவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்த்தினால் நல்லது.

    ஆனால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, பால் தட்டுப்பாட்டை காரணம் காட்டி விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது. தனியார் பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருளான பால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைத்தால்தான் குழந்தைகள் அடிப்படையான ஊட்டச்சத்தினை பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×