search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றதை படத்தில் காணலாம்.
    X
    ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றதை படத்தில் காணலாம்.

    தோகைமலை அருகே ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்

    தோகைமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ராச்சாண்டார்திருமலையில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதேபோல இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக ராச்சாண்டார்திருமலையில் உள்ள விராச்சிலை ஈஸ்வரர்-பிடாரி அம்மன் கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. நேற்று காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர் களுக்கும் டாக்டர் குழுவினர் உடல் தகுதி பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள், கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை தூக்கி வீசி சென்றன. இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், குளித்தலை தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டில் கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 805 காளைகள் பங்கேற்றன. 385 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், குக்கர், சைக்கிள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், தங்க மற்றும் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் வீரர்கள் 14 பேர், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் 31 பேர் என மொத்தம் 45 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காய மடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்த 8 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×