search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பொங்கல் விளையாட்டு போட்டியில் மோதல்- கபடி வீரர் குத்திக் கொலை

    கோவையில் பொங்கல் விளையாட்டு போட்டியில் கபடி வீரர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நவீன்குமார் (30). கபடி குழு நடத்தி வருகிறார். சிறந்த கபடி வீரர் ஆவார்.

    இவரது நண்பர் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் (34). கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி அம்மன் குளம் பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் நவீன்குமார் அவரது நண்பர் லோகேஸ்வரன் மற்றும் வெளியில் இருந்து 2 பேரை நவீன்குமார் களம் இறக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த அணியை எதிர்த்து வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த விஜயகுமார் என்கிற கொக்கு விஜயகுமார் (23) என்பவரது அணி களம் இறங்கியது.

    மொத்தம் 7 போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நவீன் குமார் அணி வெற்றி பெற்று ரொக்கப்பணம் மற்றும் பரிசு கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பின்னர் நவீன்குமாரும், அவரது நண்பர் லோகேஸ்வரனும் அம்மன் குளம் பகுதியில் உள்ள நியூ தாமு நகரில் கை, கால் கழுவி கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு விஜயகுமார், அவரது தம்பி கண்ணன், விஜயகுமாரின் நண்பர் பெரிய நாயக்கன் பாளையம் ஜோதி நகரை சேர்ந்த ஹரிகரன் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் நவீன் குமாரிடம் வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வெற்றி பெறுவதெல்லாம் பெருமையா? என கேட்டனர். அதற்கு நவீன் குமார் தரப்பினர் வடவள்ளியில் இருந்து எங்கள் பகுதிக்கு ஏன் வந்தீர்கள்? என கேட்டனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன் குமாரை சரமாரியாக குத்தினார்.

    இதில் அவரது நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட 5 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த விஜயகுமார் நண்பர் லோகேஸ்வரனுக்கும் கத்திக் குத்து விழுந்தது

    கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த நவீன் குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கண்ணன், ஹரிகரனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நவீன் குமார் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இதனை தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணன், ஹரிகரனை தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட நவீன் குமார் மீது ராமநாதபுரம், சாய்பாபா காலனி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, கஞ்சா வழக்குகள் உள்ளது.

    இது போல் விஜயகுமார் மீதும் வழக்குகள் உள்ளது. பொங்கல் விளையாட்டு போட்டியின் போது கபடி வீரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×