search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை
    X
    முல்லைப் பெரியாறு அணை

    பெரியாறு அணையில் குறைந்துவரும் நீர்மட்டம்- 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா?

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பிரதான பாசன அணையாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது.

    தமிழக பொதுப் பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது. 1895-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.

    இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும், மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

    இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் மாதம் முல்லைப் பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால், அணையிலிருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு காலதாமதமாக கடந்தாண்டு ஆகஸ்டு 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதல் போக நெல் அறுவடையைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2-ம் போக நெல்சாகுபடியை தவிர்த்து அவரை எள்ளு, கம்பு, சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிரிட விவசாயிகளை அறிவுறுத்தினர். ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடியை சில விவசாயிகள் தொடங்கினர்.

    இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு வரும் மார்ச் மாதம் வரை தண்ணீர் தேவைப்படும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 119.85 அடியாக உள்ளது. இதனால் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 600 கன அடியில் இருந்து 467 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 163 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    இதனால் 2-ம் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முடியுமா என்று விவசாயிகள் கவலையில் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. 353 கன அடி நீர் வருகிறது. 1390 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடியாக உள்ளது. 39 கன அடி நீர் வருகிறது 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.80 அடியாக உள்ளது. 22 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×