search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: திட்டம் வகுத்து கொடுத்த பயங்கரவாதி கைது

    களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்து, அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறிய பெங்களூரு பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் கைது செய்யப்பட்டனர்.

    கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவரும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுக்க குமரி மாவட்ட போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (20-ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே கைதான அப்துல் சமீம், தவுபீக் இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் இவர்களை 30 நாட்கள் வரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்க முடியும்.

    இதற்கிடையே அப்துல் சமீம், தவுபீக் தொடர்பான பின்னணி குறித்து தமிழக கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், இருவருக்கும் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும், இப்போது இவர்கள் அல்ஹந்த் என்ற இயக்கத்தை தொடங்கி இளைஞர்களை சேர்த்து வருவதும் தெரிய வந்தது.

    இந்த இயக்கத்திற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தனித்தனி தலைவர்கள் இருப்பதும், அந்த தலைவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து பயங்கரவாத பயிற்சி அளிப்பதும், கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

    இத்தகவல்களை திரட்டிய தமிழக கியூ பிரிவு போலீசார் குஜராத், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இந்த இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 17 பேரை கைது செய்தனர்.

    இதில், டெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான அப்துல் சமீமின் கூட்டாளி. இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலையில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதிய கியூ பிரிவு போலீசார், கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வாங்கி கொடுத்தது பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா என்பது தெரிய வந்தது.

    மெகபூப் பாஷா, அவரது மும்பை கூட்டாளி இஜாஷ் பாஷா மூலம் 5 துப்பாக்கிகளை வாங்கி வந்து அவற்றை அப்துல் சமீம் உள்பட சிலருக்கு கொடுத்துள்ளார். துப்பாக்கி கிடைத்ததும், அப்துல் சமீம், களியக்காவிளை வந்து தவுபீக்கை தன்னுடன் சேர்த்து கொண்டு கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்.

    இதன் மூலம் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்ததும், அதனை நிறைவேற்ற வழிமுறைகளை கூறியதும் பெங்களூரு பயங்கரவாதி மெகபூப் பாஷா என்பது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து மெகபூப் பாஷாவை பிடிக்க கர்நாடகா போலீசாருக்கு தமிழக கியூ பிரிவு போலீசார் தகவல் கொடுத்தனர். கர்நாடகா போலீசார், மெகபூப் பாஷாவின் இருப்பிடங்களை கண்காணித்தனர். இதில் அவர், பெங்களூரு மாநகர பகுதியில் குருப்பனாபால்யா பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.

    நேற்று அங்கு அதிரடியாக சென்ற கர்நாடக போலீசார் மெகபூப் பாஷாவை கைது செய்தனர். இந்த தகவல் தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    மெகபூப் பாஷா கைதானது குறித்து பெங்களூரு போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மெகபூப் பாஷா, பெங்களூருவில் சமய வகுப்பு நடத்தி வந்துள்ளார். இங்கு பயில வந்த இளைஞர்களுக்கு பயங்கரவாத கருத்துக்களை கற்றுக் கொடுத்து மூளைச் சலவை செய்துள்ளார்.

    இதன் மூலம் அந்த இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டி உள்ளார். இவர் மூலம் சுமார் 17 இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    பயங்கரவாத செயல்களை வழி நடத்தும் கர்நாடக மாநில தலைவராகவும் மெகபூப் பாஷா இருந்துள்ளார்.

    மெகபூப் பாஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்களில் அப்துல் சமீம், தவுபீக் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். ஏற்கனவே இம்ரான்கான், ஹனிப்கான், இஜாஷ் பாஷா, லியாகத் அலி உள்பட 11 பேர் கைதாகி இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களையும் கைது செய்ய தமிழக கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கைதான மெகபூப் பாஷாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×