search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்ற காட்சி
    X
    பனிமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்ற காட்சி

    தஞ்சையில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

    தஞ்சையில் வாகனங்கள் தெரியாத வகையில் பனி இருந்ததால் விபத்தினை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியும், ஹார்ன் அடித்தபடியும் சென்றன.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் பனிக்காலமாகும். அதிலிம் தை மாதத்தில் குளிர் மற்றும் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும். அதன்படி தை மாதம் பிறந்ததையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. மாலையில் தொடங்கும் பனிப்பொழிவானது காலை 8 மணி வரை நீடிக்கிறது. இரவில் கடும் குளிரோடு குளிர்ந்த காற்று வீசுகிறது.

    பனியானது வெண்மேகங்கள் போல் வீட்டின் மேற்புறம், தெருக்களிலும் புகுந்து சென்றன. புற்களில் பனித்துளி படர்ந்து காணப்படுகிறது. இந்த சீதோஷ்ண நிலையானது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். குறிப்பாக தஞ்சையில் உள்ள மேம்பாலங்கள் பனிமூட்டத்தால் மறைந்து காணப்பட்டது. காலை வரை அதே நிலைமை தான் இருந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல பனி விலகி பாலங்கள் தெரிய தொடங்கியது.

    அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி செல்வோர் ஸ்வெட்டர், மப்ளர் அணிந்து செல்வதை காண முடிந்தது. சாலையில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத வகையில் பனி இருந்ததால் விபத்தினை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியும், ஹார்ன் அடித்தபடியும் சென்றன. மேலும் புறவழிச்சாலை உள்ளிட்ட இதர சாலைகளில் சென்ற பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் வேகத்தை குறைத்து முகப்பு விளக்கை ஒளிரவிட்டவாறு சென்றதை காண முடிந்தது.

    வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு காலை வேளையில் வந்த பெரும்பாலான ரெயில்கள் கூட முகப்பு விளக்கை எரிய விட்டப்படி தான் வந்தன.

    விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவுக்கு அதிகமாக குளிர் காணப்பட்டது. இதன் காரணமாக அதிகாலையிலேயே வயலுக்கு சென்று தங்களது அன்றாட விவசாய வேலைகளை பார்க்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். சூரிய உதயம் தெரிந்த பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர். பொதுமக்களும் அதிகாலையில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    Next Story
    ×