search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி வரத்து அதிகரிப்பு

    விளைச்சல் அதிகம் காரணமாக கோயம்பேடு மார்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    கோயம்பேடு:

    தமிழகத்தில் சென்ற ஆண்டு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்ததன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் வழக்கத்தை விட காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

    சுமார் 50 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் செய்து வருகிறார்கள். இது கடந்த ஆண்டை விட அதிகம். பருவ மழை மற்றும் விளைச்சல் அதிகம் காரணமாக கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு கடந்த 10 நாட்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக காய்கறிகள் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் முள்ளங்கி, சவ்சவ், நூக்கல், வெள்ளரிக்காய், புடலங்காய், முட்டைகோஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் மொத்த விற்பனையில் கிலோ ரூ. 10-க்கும் சுரக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், கொத்தவரங்காய், கோவக்காய் உள்ளிட்ட காய்கறிகள் ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    காய்கறிகள் விலை ரூ. 50-க்கு கீழ் இருந்தது. காய்கறி விலை சரிவு காரணமாக இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்தோடு அதிகளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    கேரட், கிழங்கு வகைகள் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோத்தகிரி பகுதிகளில் இருந்தும் காலிபிளவர் கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், வெங்காயம் ஒட்டன்சத்திரம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு வந்தபடி உள்ளன.

    காய்கறி வரத்து அதிகரிப்பு குறித்து வியாபாரி சுகுமார் கூறியதாவது:-

    கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 330 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் தற்போது விளைச்சல் அதிகம் காரணமாக காய்கறிகள் 380 முதல் 400 லாரிகளில் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சிறு கிழங்கு, முருங்கைக்காய், கேரட், சின்ன வெங்காயம் தவிர மற்ற காய்கறிகள் விலை அதிக அளவில் குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×