search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி
    X
    அமைச்சர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி

    புதுவை கவர்னருக்கு முதல்வர் சவால்- ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்

    தன் மீதான புகாரை கவர்னர் வெளியிட்டது அழகல்ல என்றும், ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சவால் விட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெல்லியில் பிரதமர், நிதி மந்திரி, உள்துறை மந்திரி, தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்தேன்.

    அப்போது புதுவைக்கு தேவையான திட்டங்களுக்கு நிதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன். மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகை அளிக்கவும், மாநில அந்தஸ்து வழங்கவும் வலியுறுத்தினேன்.

    தனவேலு எம்.எல்.ஏ. என் மீது மட்டுமின்றி, மாநில காங்கிரஸ் ஆட்சி, அமைச்சர்கள் மீது புகார்களை கூறியுள்ளார். இந்த புகார்கள் தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளார். நானும், எனது மகனும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கவர்னரிடம் புகார் அளித்ததாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது, கவர்னருக்கு அழகல்ல.

    கிரண் பேடி

    யார் ஒருவர் புகார் அளித்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும். அந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என ஆராய வேண்டும். அதன்பிறகு புகாரை பற்றி கூற வேண்டும். இவை எதுவும் இல்லாமல் கவர்னர் வாய்மொழியாக வந்த புகாரை பத்திரிகை செய்தியாக கொடுத்துள்ளது கவர்னராக இருக்க கிரண்பேடி தகுதியற்றவர், நிர்வாகம் தெரியாதவர் என்பதையே காட்டுகிறது.

    நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நானோ, எனது மகனோ, குடும்பத்தினரோ நில அபகரிப்பில் ஈடுபட்டதை ஆதாரத்துடன் நிரூபித்தால் எனது முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக உள்ளேன். இதேபோல என் மீது புகார் கூறியவரும், அந்த புகாரை பத்திரிகைக்கு அளித்த கவர்னரும் ஆதாரத்தை நிரூபிக்காவிட்டால் அவர்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேற தயாரா?

    நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள், மத்திய மந்திரியாக 10 ஆண்டுகள், புதுவை முதல்- அமைச்சராக 3 ஆண்டுகாலம் இருந்துள்ளேன். நான் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்டிருந்தாலோ பிரதமர் மன்மோகன்சிங், கட்சி தலைவர் சோனியாகாந்தி, இளம்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் நன்மதிப்பு பெற்றவராக இருக்க முடியுமா? ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினால் அதை ஆதாரத்துடன் கூற வேண்டும்.

    சொல்பவர் யார்? என்று புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். கவர்னர் என் மீது கடந்த 3½ ஆண்டாக ஏதாவது ஒரு புகாரை கண்டுபிடிக்க வேண்டும் என தேடிக்கொண்டிருக்கிறார். தனவேலுக்கு பின்னால் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜனதாவும் உள்ளது. கவர்னருக்கு நிர்வாகம் தெரியாது என பலமுறை கூறியுள்ளேன். அதை தற்போதும் அவர் நிரூபித்துள்ளார்.

    முதல்-அமைச்சர், அமைச்சர்களை அசிங்கப் படுத்துவது, அதிகாரிகளை மிரட்டுவது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் மட்டுமே கவர்னர் ஈடுபட்டு வருகிறார். தனவேலு எம்.எல்.ஏ. மீது மானநஷ்ட வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன்ஆலோசனை நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×