search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிச்சந்திரன்
    X
    ரவிச்சந்திரன்

    பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்தார்.
    அருப்புக்கோட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக் கோரி மதுரை ஜகோர்ட்டில் அவருடைய தாயார் ராஜேஸ்வரி மனு செய்தார். அந்த மனு மீது நீதிபதிகள் விசாரணை நடத்தி ரவிச்சந்திரனுக்கு வருகிற 25-ந் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் பரோலில் வெளியே வந்தார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிறையில் இருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

    தாயாருடன் தங்கியிருந்த ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டையில் உள்ள புண்ணியஸ்தலமான சிவன் கோவில்களுக்கு சென்று வழிபடவும், ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கவும் வெளியே செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆதார் அட்டை எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டார். இதனிடையே அதிகாரிகள், ஆதார் அட்டை வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி உத்தரவு பெற்றார். அதன் பேரில் ரவிச்சந்திரனுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் சென்று ரவிச்சந்திரன் வழிபட்டார்.
    Next Story
    ×