search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையை அடக்கும் வீரர்
    X
    காளையை அடக்கும் வீரர்

    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் தொடங்கியது. வாடிவாசல் வழியாக சீறி வரும் காளைகளை இளைஞர்கள் பிடித்து அடக்குவதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.
    பாலமேடு

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

    இந்நிலையில் மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  சீறி வரும் காளைகளை பிடிக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். 

    ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில்  நிற்கும் காளைகள்

    இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை பிடித்து பரிசை தட்டிச்செல்வதற்கு 936 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்படுகின்றனர். ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.  கார், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.  

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் காயமடையும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவி செய்வதற்கு தயார் நிலையில் மருத்துவக் குழுவினர் உள்ளனர்.
    Next Story
    ×