search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தருமபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது

    தருமபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டி வைத்திருந்த மணி பர்சில் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது66). இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது மகனை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டில் இருந்து ராணி தருமபுரி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் உள்பட 18 பவுன் தங்க நகையை கழற்றி மணி பர்சில் வைத்துள்ளார். பின்னர் அந்த மணி பர்சை கைப்பையில் மறைந்து வைத்தார். 

    இதையடுத்து பஸ் சிறிது தூரம் சென்ற போது கண்டக்டர் டிக்கெட் எடுக்க ராணியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் தனது மணி பர்சை தேடினார். ஆனால் மணி பர்சை காணவில்லை. இதனால் பதறி போன அவர் கைப்பையில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    உடனே பஸ்சில் இருந்து இறங்கி ராணி தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசார் பஸ் நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை  ஆய்வு செய்தனர். அந்த நேரத்தை வைத்து பார்த்த போது ராணியை பின்தொடர்ந்து 2 பேர் சென்று கொண்டிருந்ததும். அவருக்கு தெரியாமல் சற்று அயர்ந்த நேரத்தில் கைப்பையில் இருந்து நகையை திருடியதும் தெரியவந்தது. 

    நகை திருடி விட்டு பஸ் நிலையத்தை சுற்றித்திரிந்த அரூரை அடுத்துள்ள மோட்டூரை சேர்ந்த ராஜம்மாள் (66), ரஞ்சிதம் (40) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நகை திருடியதை ஒப்புகொண்டனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 18 பவுன் தங்க நகையை கைப்பற்றி போலீசார் ராணியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நகை திருடிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பஸ்நிலையத்தில் நகை திருடுபவர்களை கைது செய்ய தருமபுரி டவுன் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மாறுவேடத்தில் வலம் வந்தார். அப்போது ரஞ்சிதம் பெண் போலீஸ் என்று கூட தெரியாமல் அவரிடம் செல்போன் மற்றும் நகைகளை திருடினார். சுதாரித்துக்கொண்ட அவர் சுற்றிவளைத்து பிடித்து ரஞ்சிதத்தை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×