search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பல்லவி பல்தேவ்
    X
    கலெக்டர் பல்லவி பல்தேவ்

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு

    ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு அளித்தார்.
    தேனி: 

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

    தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தனித்தனியாக கோரிக்கை மனுவை அளித்தனர். தங்களுக்கு சொந்த வீடு இல்லாததால், அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் தங்களின் மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    தேனி அருகே உள்ள மல்லையகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு அளிக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் சிலர் போலி பட்டா மூலம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்க உடந்தையாக இருந்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    இந்த கூட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் ஜக்கையன் அளித்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. இதனால், கூலி வேலை செய்யும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பின்னர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    Next Story
    ×