search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ. தனவேலு
    X
    எம்.எல்.ஏ. தனவேலு

    புதுவை அரசு மீது கவர்னரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊழல் புகார்

    புதுவை அரசு மீது கவர்னர் கிரண்பேடியிடம் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் புகார் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு புதுவை மாநில காங்கிரஸ் அரசு மீதும், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது பரபரப்பான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

    நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மிக மோசமான ஆட்சி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சய்தத் மீதும் கடுமையான விமர்சனங்களை கூறினார்.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் நேரில் சென்று அளிக்க இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் நேற்று மாலை தனவேலு எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடியை ராஜ்நிவாசில் சந்தித்தார். அப்போது அவர் கவர்னரிடம் மனு அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் எனது தொகுதியில் நடைபெறும் பணிகளை முடக்க முயற்சி செய்வதாக எனக்கு தகவல்கள் வந்தது. எனது தொகுதியில் ரூ.30 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்த திட்டங்களில் எதுவும் தலையிடக்கூடாது என கவர்னரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் கண்காணிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் நான் எம்.எல்.ஏ. வாக வரக்கூடாது என நினைக்கிறார். என்னுடைய அரசியல் வாழ்க்கையை அழித்துவிட பார்க்கின்றனர். எனது தொகுதியில் மக்கள் செல்வாக்கு எனக்கு உள்ளது.

    மக்கள் நினைத்தால் தான் என்னை அழிக்க முடியும். என்னை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். அவர்கள் அரசியல் வாழ்க்கைதான் முடிவுக்கு வரும்.

    ஆளும் கட்சி அனுப்பும் கோப்புகளை கவர்னர் தடுத்து நிறுத்துவதாக கூறி வருகின்றனர். அது, முற்றிலும் தவறு. இலவச துணி வழங்குவதில் ஒரு வருக்கு ரூ.500 ஒதுக்கி விட்டு அதில் ரூ.200 மட்டுமே செலவு செய்கின்றனர்.

    மீதி தொகையை முதல்- அமைச்சர்-அமைச்சர்கள் பங்கிட்டுக் கொள்கின்றனர். இதை கண்டுபிடித்து கவர்னர் கோப்புகளை திருப்பி அனுப்புகின்றார். அவர் நலத்திட்டங்களை தடுக்கவில்லை.

    முதல்வர் நாராயணசாமி

    அமைச்சர்கள் ஊழல் குறித்து அனைத்து கோப்புகளையும் முறையாக தயாரித்து விட்டு அதன்பின் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிப்பேன். கட்சி தலைமையிடமும் புகார் செய்ய உள்ளேன்.

    இதுகுறித்து கட்சி தலைமையிடம் நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளேன். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் டெல்லி சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன்.

    நான் காங்கிரஸ் கட்சியை விட்டு போக மாட்டேன். தேவைப்பட்டால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். கவர்னரை சந்தித்த போது முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீதான விவகாரம் தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்தார்.

    தனவேலு எம்.எல்.ஏ. சந்திப்பு குறித்து கவர்னர் கிரண்பேடி ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு என்னை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் தனது மகனுடன் சேர்ந்து மேற்கொண்ட நில ஒப்பந்தங்களில் அப்பட்டமாக ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை சேகரித்து வருவதாக கூறினார்.

    அதற்கு அவரிடம் புதுவையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தை அணுகுமாறு கூறினேன். அதற்கு அவர் “பொங்கல் பண்டிகைக்கு பிறகு என்னை மீண்டும் சந்திப்பதாகவும், சி.பி.ஐ.க்கு அனுப்பும் ஆதாரங்களை தன்னிடம் காட்டுவதாகவும் தெரிவித்தார்” என கூறியுள்ளார்.

    இதனிடையே டெல்லி சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் கட்சி தலைமையிடம் தனவேலு எம்.எல்.ஏ. மீது புகார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×