search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன் எம்.எல்.ஏ.
    X
    அன்பழகன் எம்.எல்.ஏ.

    பொங்கல் பரிசு விவகாரத்தில் மக்களை ஏமாற்றி விட்டார்கள்- அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    பொங்கல் பரிசு விவகாரத்தில் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்று புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும், காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத செயலை செய்து வருகிறது. மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நன்மைக்கும் எந்த ஒரு உறுப்படியான திட்டத்தையும் செயல்படுத்தாத அரசாக உள்ளது.

    பொங்கல், தீபாவளி பண்டிகை காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய துணி, சர்க்கரை, பொங்கல் பொருட்கள் போன்ற சாதாரண வி‌ஷயங்களை கூட மக்கள் அனைவருக்கும் வழங்காமல் ஏமாற்றி வருகிறது.

    தமிழகத்தைப் பின்பற்றி புதுவையிலும் ரூ.ஆயிரம் மக்களுக்கு வழங்கப்படும் என வெற்று அறிக்கையை விட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று வரை பணம் வழங்குவதற்கான அரசாரணையை கூட வெளியிடவில்லை.

    பொங்கல் பொருட்கள், வேட்டி சேலை அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டதை தடுத்து வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கடந்த ஆண்டிற்கு முன் மக்கள் விரோத காங்கிரஸ் அரசானது அதற்கான அரசாணையை பிறப்பித்தது.

    இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் அ.தி. மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது நம்முடைய முதல்-அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அனைவருக்கும் அடுத்த ஆண்டில் இருந்து உணவு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என சட்டசபையிலேயே உறுதியளித்தனர்.

    ஆனால் இவர்கள் உறுதியளித்ததைப்போன்று தற்போது மொத்தமுள்ள 3.55 லட்சம் குடும்ப ரே‌ஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கான ரூ.170-ஐ வழங்காமல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.91 லட்சம் குடும்பத்திற்கு மட்டும் ரூ.170 வங்கியில் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை அந்த மக்கள் ஏ.டி.எம்.களில் எடுப்பதற்கே வங்கி நிர்வாகம் ரூ.28 கமி‌ஷனாக பிடித்து கொள்ளும். இதுவே அங்கன்வாடி மூலமாக பணத்தையோ, அல்லது ரே‌ஷன் கடைகள் மூலம் பொங்கல் உணவு பொருட்களையோ வழங்கியிருந்தால் முழுமையாக மக்களை அடைந்திருக்கும்.

    மேலும் அனைவருக்கும் வழங்கியிருந்தாலே ரூ.5 கோடிக்குள்தான் செலவாகி இருக்கும். இதற்கு கவர்னரின் அனுமதியை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என தீர்ப்பு அளித்தற்குப்பிறகு 90 சதவீத கோப்புகளை கவர்னருக்கு அனுப்புவதில்லை என்று கூறியிருந்தார். அவ்வாறு கூறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏன் இந்த சிறிய திட்டத்திற்கான கோப்பை கவர்னரின் அனுமதிக்கு அனுப்பி, அனைவருக்கும் கிடைக்காமல் இருக்க செய்துள்ளார்? சாதாரண திட்டத்தை கூட சரிவர செயல்படுத்த முடியாத இந்த அரசு என்பது ஒரு தோல்வி கண்ட அரசாக உள்ளது.

    எனவே இதற்கு மேலும் மக்களை ஏமாற்றாமல் முதல்-அமைச்சர் உறுதியளித்தபடி அனைவருக்கும் பொங்கல் பரிசாக பொங்கல் உணவுப் பொருட்கள், ரூ.ஆயிரம் பணமும் உடனடியாக மக்களுக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எந்த ஒரு திட்டத்தையும் காலத்தோடு செயல்படுத் தாமல் கடைசி நேரத்தில் அந்த திட்டத்தையே முடக்குவதில் ஆளும் காங்கிரஸ் அரசானது வல்லமை படைத்த அரசாக உள்ளது. வாக்களித்த மக்களை ஏமாற்றும் எந்த அரசும் நீடித்ததாக சரித்திரம் இல்லை. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×