
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு காவல்துறையினருக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
விழுப்புரம் தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பலத்த சோதனைக்கு பின்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 810 போலீசார் தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அனந்தபுரம் போலீஸ்நிலைய முதுநிலை காவலர் மணி துண்டு சீட்டை மறைத்து வைத்து பார்த்து எழுதி கொண்டிருந்தார்.
இதை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் போலீஸ்காரர் மணியை சோதனை செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த சட்டம் குறித்த விடைகள் தொடர்பான 4 பக்க ஜெராக்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை மற்றும் போலீஸ்காரர் மணி எழுதிய விடைத்தாள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
பின்னர் போலீஸ்காரர் மணி தேர்வு அறையில் இருந்து அதிகாரி மூலம் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், எழுத்து தேர்வில் காப்பி அடித்த போலீஸ்காரர் மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்றார்.