search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பொன்னேரி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1லட்சம் பணம்-நகை கொள்ளை

    பொன்னேரி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பீரோ உடைத்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் 18 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வெண்பாக்கம், கக்கன்ஜி தெருவில் வசித்து வருபவர் சத்ய மூர்த்தி. ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகை மற்றும் திருப்பதி கோவிலுக்கு கொண்டு செல்ல வைத்திருந்த உண்டியல் பணம், 2 கைக் கடிகாரம் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    வீட்டின் மாடி வழியாக ஏறிக்குதித்த கொள்ளையர்கள் அங்கிருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்று உள்ளனர். கொள்ளை நடந்த சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் அருகேயே 3 போலீஸ்காரர்கள் வீடும் உள்ளது.

    கொள்ளை நடந்தது அருகில் வசிப்பவர்கள் யாருக்கும் தெரியவில்லை. சத்ய மூர்த்தி வீட்டுக்கு வந்த பின்னரே கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது.

    இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் முதுநிலை பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 6-ந் தேதி அவர் சொந்த ஊரான திருச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்றிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 22 சவரன் நகை, கேமரா, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை வாலிபர் ஒருவர் கல்வீசி உடைத்தார். இதனை கண்ட காவலாளி, அவரை பிடித்து அண்ணாசலை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த யுவன் என்று தெரிய வந்தது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருக்கும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×