search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுக் மணிமண்டபம்.
    X
    லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுக் மணிமண்டபம்.

    முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படும் பென்னிகுக் பிறந்த நாள்

    முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ள பென்னிகுக் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணை கடந்த 1895-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளரான கர்னல் ஜான்பென்னிகுக் தனது கடுமையான முயற்சியால் பல்வேறு சோதனைகளுக்கு இடையே இந்த அணையை கட்டி முடித்தார். தற்போது இந்த அணை 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையாக உள்ளது.

    அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் தமிழகம் மற்றும் கேரள அரசுகளிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2011-ம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் சுமார் 40 நாட்கள் கேரளாவை நோக்கி தொடர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து அணை குறித்த வரலாறும், அதனை கட்டி முடித்த ஜான்பென்னிகுக் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அவரை தேனி மாவட்ட மக்கள் தங்கள் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

    பென்னிகுக்கின் முழு உருவ வெண்கல சிலை.

    தங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் அவரது படத்தை வைத்து வணங்கி வருகின்றனர். மேலும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் பென்னிகுக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர்.

    அவரது பிறந்த நாளான ஜனவரி 15-ந்தேதி தேனி மாவட்டத்திற்கு எப்போதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அன்றைய தினம் பாலார்பட்டி மற்றும் சுருளிபட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா லோயர்கேம்ப் பகுதியில் பென்னிகுக் மணிமண்டபமும், அவரது முழு உருவ வெண்கல சிலையையும் அரசு சார்பில் அமைத்து விழா நடத்தினார்.

    அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

    பென்னிகுக் மணிமண்டபத்தை ஜெயலலிதா திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து இவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மணிமண்டபத்தை கண்டு செல்கின்றனர்.

    தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுக் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதன்முறையாக அரசு விழா அனுஷ்டிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 1841-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி ஆங்கிலேய ராணுவ அதிகாரிக்கு மகனாக பென்னிகுக் பிறந்தார்.

    தற்போது அவரது பிறந்த நாள் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் உற்சாகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவரது பிறந்த நாள் விழாவில் விவசாயிகள் அனைவரும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் பென்னிகுக் மணிமண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
    Next Story
    ×