search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    திருவாரூர் அருகே தி.மு.கவை கண்டித்து கூட்டணி கட்சி சாலை மறியல்- 15 பேர் மீது வழக்குப்பதிவு

    தி.மு.கவிற்கு எதிராக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி மறியலில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அடியத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 6 இடங்களிலும், தி.மு.க கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது அடியத்தமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் தி.மு.கவும், கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி தலைவர் பதவி தி.மு.கவிற்கும், துணை தலைவர் பதவி மனித நேய மக்கள் கட்சிக்கும் என முடிவெடுத்து போட்டியிட்டது.

    இந்நிலையில் இந்த மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை தி.மு.கவே கைப்பற்றியதால் மனித நேய மக்கள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை அடியக்கமங்கலம் ஊராட்சி அலுவலக சாலையில் தி.மு.க துரோகம் செய்துவிட்டதாக கூறி கருப்புக்கொடியுடன் மனித நேய மக்கள் கட்சி மற்றும் த.ம.மு.கவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலை கைவிடும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தி.மு.கவிற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்திருந்தனர்.

    இதையடுத்து நீண்ட நேரம் நடந்த தொடர் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக கூறி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் சாலைமறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சி மற்றும் த.ம.மு.கவை சேர்ந்த நவாசலி, அப்துல்காயல், தவூத்நூறுபா, சாதிக்அலி, முகமதுபாரத் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×