
களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த வில்சன் ஓட்டப்பந்தய வீரர் ஆவார். விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியதன் மூலமாக போலீஸ்துறையில் வில்சனுக்கு வேலை கிடைத்து உள்ளது.
போலீஸ்துறையில் ஏட்டாக பணிக்கு சேர்ந்த வில்சன் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனார். சக போலீசாரிடம் அன்பாக பழகி வந்ததுடன் நேர்மையாகவும் இருந்து வந்தார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு ஏஞ்சல்மேரி என்ற மனைவியும், ஆண்ரிஸ் ரெமிஜா, வினிதா என்ற 2 மகள்களும் உள்ளனர். ஆண்ரிஸ் ரெமிஜாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. வினிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை இழந்து வாடும் குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர். வில்சனின் இழப்பு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாக உள்ளது.
வில்சன் மரணம் குறித்து மனைவி ஏஞ்சல்மேரி கூறியதாவது:-
எனது கணவரின் மரணத்தை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
எனது கணவர் குடும்பத்தைவிட போலீஸ் துறையையே அதிகம் நேசித்தார். எனது இளைய மகள் மாற்றுத்திறனாளியாவார். அவரை நான் எப்படி கரைசேர்ப்பேன். எனது கணவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக்கூடாது.
இவ்வாறு கூறி அவர் கண்ணீர்விட்டார்.
மூத்த மகள் ஆண்ரிஸ் ரெமிஜா கூறுகையில், முதலில் எனது தந்தை சுடப்பட்டது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக தெரிவித்தனர். நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். அப்போது எனது தந்தையை பார்க்க வேண்டும் என்று நான் கூறினேன். அவர் நன்றாக இருப்பதாகவும், என்னை வீட்டிற்கு செல்லுமாறும் தெரிவித்தனர். நான் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்தேன். அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டுதான் செல்வேன் என்று கூறிவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தேன்.
அப்போது அமரர் ஊர்தி ஒன்று வந்தது. அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன்பிறகு தான் எனது தந்தை இறந்த தகவல் எனக்கு தெரியவந்தது என்று கூறினார்.