
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உறைபனி காலம் தாமதமாக தொடங்கியது. ஊட்டி, தலைகுந்தா, வேலிவியூ உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை உறைபனி வாட்டியது. அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 6 டிகிரி செல்சியசாகவும் சில நாட்கள் நிலவியது.
அவலாஞ்சி, முக்கூர்த்தி போன்ற பகுதிகளில் உறைபனி சற்று அதிகமாக இருந்தது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். பல இடங்கள் வெண்பட்டாடை போர்த்தியது போன்று அடர்ந்த பனி காணப்பட்டது. இதனால் தேயிலை மற்றும் மலர்ச்செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேயிலைச்செடிகளுக்கு மலார் என்ற செடிகளால் மூடி பாதுகாத்து வருகிறார்கள். இதேபோன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 2 நாட்களாக 1 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் மைனஸ் டிகிரிக்கு வெப்ப நிலை விரைவில் செல்ல வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மாவட்டத்தின் பல பகுதி காஷ்மீர்போல் காட்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. பஸ், ரெயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
டீசல் உறைந்து விடுவதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டது. உறைபனியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். உறை பனி வாட்டுவதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தெரு மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.