search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    11,368 உறுப்பினர்களை தேர்வு செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி தேர்தல்

    1,028 கூட்டுறவு சங்கங்களில் 11 ஆயிரத்து 368 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கமிஷனர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்த கூட்டுறவு சங்கங்கள், புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த சில சங்கங்களுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் திட்டத்தை மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

    அதன்படி, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக பதிவு செய்யப்பட்ட 505 தொடக்க பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், 5 ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவு பெறும் 517 தொடக்க பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 4 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், 2 மாவட்ட கூட்டுறவு அச்சகங்கள் என 1,028 சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தலை மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

    அந்த சங்கங்கள் தொடர்பான கூட்டுறவு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இதற்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்கள். 1,028 சங்கங்களின் 11 ஆயிரத்து 368 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 3 ஆயிரத்து 102 இடங்கள் பெண்களுக்கும், 2 ஆயிரத்து 68 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 28-ந்தேதியும், மனு வாபஸ் பெறுவதற்கு 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருந்தால் பிப்ரவரி மாதம் 3-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதற்கு மறுநாள் அதாவது 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி 8-ந்தேதியன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கமிஷனர் மு.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×