
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் டி.ஜி.பி. திரிபாதி, நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அவர் தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க கேரள போலீசாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கொல்லப்பட்ட வில்சனின் இறுதிச்சடங்கிலும் டி.ஜி.பி. திரிபாதி பங்கேற்றார். அப்போது அவர் வில்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் 2 மகள்கள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
வில்சனின் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் வினிதா மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் குழித்துறை பகுதியில் உள்ள மனநலம் குன்றியோர் பள்ளியில் படித்து வருகிறார். அவர் மீது வில்சன் அதிக பாசம் வைத்திருந்தார். பணி முடிந்து வந்ததும் வில்சன் தான் வினிதாவுக்கு சோறு ஊட்டுவாராம். இதனால் வினிதா, தந்தையின் வருகையை எதிர்பார்த்து சாப்பிடாமல் காத்திருப்பாராம். வினிதாவை கவனிப்பதற்காகவே தூத்துக்குடியில் வேலை பார்த்த அவர் இடமாறுதல் வாங்கிக் கொண்டு மீண்டும் குமரி மாவட்டத்துக்கு வந்திருந்தார்.
