search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை செல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசிய போது எடுத்த படம்.
    X
    மதுரை செல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசிய போது எடுத்த படம்.

    ராகுல்காந்திக்கு பாகிஸ்தானில்தான் ஆதரவு அதிகம்: ஸ்மிருதி இரானி

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் இந்திய நலனுக்கு எதிராக பேசுவதால் பாகிஸ்தானில் அவருக்கு ஆதரவு அதிகம். அதனால்தான் காங்கிரசும், தி.மு.க.வும் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்று மதுரையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பரபரப்பாக பேசினார்.
    மதுரை :

    குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மதுரை செல்லூரில் பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-

    மத்திய பாரதீய ஜனதா அரசு பொதுமக்களுக்கு பயன் உள்ள பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவும் ஒன்று. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. பேசி வருகிறது. மேலும் அவர்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்கள். மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கூடாது என்று அரசாணை வெளியிட்ட போது, தி.மு.க. ஏன் எதிர்க்கவில்லை. அப்போது இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட இரட்டை குடியுரிமை வழங்க முயற்சிக்கவில்லை.

    பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என வாஜ்பாய் ஆட்சியில் ஆதரவளித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது ஏன்?

    காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்துக்களுக்கு மட்டும் ஆதரவானது என தவறான தகவல்களை பரப்புகின்றன.

    ராகுல் காந்தி

    தி.மு.க.விற்கு இந்துக்கள் மீது அன்பு இல்லையா? மேலும் பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய இந்து, தலித், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்தியா வருவதை விரும்பவில்லையா?.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் இந்திய நலனுக்கு எதிராக பேசுவதால் பாகிஸ்தானில் அவருக்கு ஆதரவு அதிகம். அதனால்தான் காங்கிரசும், தி.மு.க.வும் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியினர் பல்கலைக்கழக மாணவர்களை தேசத்திற்கு எதிராக தூண்டுகிறார்கள். தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்படுவது ஏன்? இந்திய நலனுக்கு எதிராக தி.மு.க. பேசுவது இது முதல் முறை அல்ல.

    இந்தியாவில் மோடி ஆட்சி வரலாற்று பிழைகளை சரி செய்யும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது. பாகிஸ்தான் சிறுபான்மை இனத்தவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி சொல்லி சென்றதை மோடி நிறைவேற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×