search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு
    X
    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு

    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு 10-ந் தேதி திருச்சி வருகை

    தேசியக்கல்லூரி நூற்றாண்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு 10-ந் தேதி திருச்சி வருகிறார்.
    திருச்சி:

    திருச்சி தேசியக்கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிராமப்புற மாணவர் களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாக கொண்டு 1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி தேசிய உயர்நிலைப்பள்ளி உருவானது. 11.6.1919 அன்று திருச்சி தேசிய கல்லூரியாக உருவெடுத்தது. தேசியக்கல்லூரியில் பயின்று மிக உயர்ந்த பதவிகளை அடைந்தவர்கள் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குனர் டாக்டர் சி.ரெங்கராஜன், ஐ.நா.வின் முன்னாள் சார்பு செயலாளர் சி.வி.நரசிம்மன், இந்திய விமான நிலைய ஆணைய முன்னாள் நிர்வாக இயக்குனர் மாதவன், நீதிபதிகள் பாஸ்கரன், கிரு‌‌ஷ்ணன் ராமசாமி, சூடானுக்கான இந்திய தூதர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியமானவர்கள்.

    மேலும் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் எங்கள் கல்லூரியில் உரை நிகழ்த்திய பெருமை உண்டு.

    1969-ம் ஆண்டு பொன்விழா, 1980-81-ம் ஆண்டு வைரவிழா கொண்டாடியது. 1995ம் ஆண்டு முத்துவிழா கொண்டாடியது. 2004-ம் ஆண்டு தேசியக்கல்லூரி கவுன்சில் 3 ஆக பிரிக்கப்பட்டது. இப்பகுப்பில் தேசியக்கல்லூரி உயர்கல்வி கழகத்தின்கீழ் வந்தது.

    கல்லூரி தலைவர் பத்ம விபூ‌‌ஷண் டாக்டர் வி.கிரு‌‌ஷ்ணமூர்த்தி, செயலாளர் க.ரகுநாதன் ஆகியோரது சிறந்த நிர்வாகத்தால் அனைத்து நிலைகளிலும் உயர்ந்து தேசியக் கல்வித்தர மதிப்பீட்டுக் குழுவினால் ‘ஏ’ தகுதி வழங்கப்பட்டதோடு, உயர் செயல்பாடுகளை கொண்ட கல்வி நிறுவனம் என இனம் காணப்பட்டு 2020-ம் ஆண்டு வரையிலான தகுதியை தானாக முன்வந்து 2023-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு ‘தற்சார்பு மீத்தகுதி’ பெற்ற நிறுவனம் என்ற சிறப்பினை வழங்கி கவுரவித்துள்ளது.

    இந்த நிலையில் தேசியக்கல்லூரி நூற்றாண்டு விழாவினை கொண்டாட உள்ளது. நூற்றாண்டு தொடக்க விழா வருகிற 10-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    கலைநிகழ்ச்சிகள், பல்திறன் போட்டிகள், சொற்பொழிவுகள், கருத்தரங்கம், கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி, விளையாட்டு என ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்துறை, கலை துறைகளை சார்ந்த அறிஞர்கள், சாதனையாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் ராமச்சந்திரன், கல்கி குழும இயக்குனர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×