search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    முத்துப்பேட்டையில் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தி சென்ற அதிமுக நிர்வாகிகள்

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை அ.தி.மு.க நிர்வாகிகள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 81 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணி 4, அ.தி.மு.க. கூட்டணி 6, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர்.

    எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காததால் வெற்றியை சுயேச்சைகள் நிர்ணையிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் சுயேச்சைகளுக்கு அதிகளவில் குதிரை பேரம் நடந்தது. இந்நிலையில் சுயேச்சைகளில் 4 பேர் தி.மு.க. கூட்டணியின் ஆதரவாளர்கள் என்பதால் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போதுமான 8 ஒன்றிய கவுன்சிலர்கள் இருந்தனர்.

    இதனையடுத்து சுயேச்சைகளை வாங்க அ.தி.மு.க. தரப்பு அவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பின்னணி, ஜாதி அமைப்புகளை வைத்து பல்வேறு நெருக்கடி ஏற்படுத்தி தங்களது வட்டத்திற்குள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தி.மு.க. தரப்புக்கு தெரிந்தும் தாங்கள் தான் வின்னர் என்று வேலையை பார்த்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அ.தி.மு.க.வினர் தனது கூட்டணி கவுன்சிலர்கள் உட்பட ஓவ்வொரு கவுன் சிலருக்கும் 2 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி அவர்கள் வட்டத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தபோது தி.மு.க. தரப்பு கவுன்சிலர்கள் எந்தவித தடையுமின்றி அலுவலகத்திற்கு பதவியேற்க வந்தனர். ஆனால் அ.தி.மு.க. அணி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தனது வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்ட சுயேச்சை கவுன்சிலர்களை தனித்தனியாக கார்களில் மிகுந்த பாதுக்காப்புடன் கொண்டு வந்து அலுவலகத்திற்குள் விட்டனர்.

    அவர்கள் தப்பி செல்லாமல் இருக்க ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் ஆட்களை கண்காணிக்க நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் பதவியேற்று வந்ததும் அ.திமு.க.வினர் சூழ்ந்து அனைவரையும் தனித்தனி கார்களில் ஒன்றாக ஏற்றி கடத்தி சென்றனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கடத்தல் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை நேரடியாக பார்த்த மக்கள் மற்றும் வியாபாரிகள் ‘இதுவல்லாம் ஒரு பொழப்பா.. இவர்கள் பொறுப்புக்கு வந்தால் என்னாவது? நல்ல நிர்வாகம் தரமுடியுமா’ என வேதனை தெரிவித்தனர்.

    இதனையல்லாம் பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தி.மு.க. கூட்டணியினர் தர்மம் தான் வெல்லும்.. இது ஒரு நாடகம் தான்.. இங்கு வெற்றி பெறுவது எங்கள் அணி தான் என்றனர்.

    Next Story
    ×