search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாம்

    தென்காசியில் வருகிற 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தகவல்

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 914 குழந்தைகள் பயனடைவார்கள்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 914 குழந்தைகள் பயனடைவார்கள்.

    கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் மொத்தம் 875 மையங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ்நிலையம், ரெயில் நிலையம், இடம்பெயர்ந்து வாழும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 1.12 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 2 நாட்களும் பணியாளர்களால் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமில் அவர்களுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மொத்தமுள்ள 875 மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த 242 பணியாளர்களும், கல்லூரி மாணவர்கள் 149 பேரும், அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 1700 பேரும், ரெட் கிராஸ், ரோட்டரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 1500 பேர் உள்பட மொத்தம் 3,600 பேர் பணியாற்ற உள்ளனர். இதுதவிர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் முகாம்கள் நடைபெற உள்ளது.

    ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளுமாறும், போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×