search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் வேனில் பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி.
    X
    ஓசூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர்கள் வேனில் பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்ட காட்சி.

    ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி: அதிமுக- திமுக கவுன்சிலர்கள் கடத்தல்

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    சென்னை:

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றதை தொடர்ந்து தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுகத்தேர்தல் வருகிற 11-ந்தேதி நடக்கிறது.

    உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மொத்தம் உள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 2,100 இடங்களிலும், அ.தி.மு.க. 1,781 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போல மற்ற கட்சிகளும் பல இடங்களில் வென்றுள்ளன.

    அதே நேரத்தில் சுயேட்சைகளும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதனால் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பிடிப்பதில் இவர்களே முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள்.

    இதையடுத்து சுயேட்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அ.தி. மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.

    சுயேட்சை கவுன்சிலர்களை கடத்துவதற்கும் பல இடங்களில் முயற்சி நடந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களும் பல இடங்களில் கடத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் கவுன்சிலர்கள் பலர் அணி மாறவும் இப்போதே தயாராகி வருகிறார்கள். இதனால் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    2 கூட்டணிகளைச் சேர்ந்தவர்களும் எப்படியாவது பதவியை பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சின்னமனூர் ஒன்றியத்தில் 1-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர் ஜெயந்தியை அ.தி.மு.க.வினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    திமுக கவுன்சிலர் ஜெயந்தியை போலீசார் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள 10 வார்டுகளில் தி.மு.க.-6 இடங்களிலும், அ.தி.மு.க. -4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று பதவி ஏற்பு விழா முடிந்ததும் 1-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ஜெயந்தியை தி.மு.க.வினர் தங்கள் காரில் அழைத்து செல்ல முயன்றனர்.

    ஆனால் அவர்களுடன் செல்ல ஜெயந்தி மறுத்து விட்டார். அவரை அ.தி.மு.க. வினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டதாக தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பினர்

    இதையடுத்து ஜெயந்தியை போலீசார் பாதுகாப்பாக வேறு ஒரு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க.-8 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வென்றுள்ளது. தினகரன் கட்சியான அ.ம.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    அ.ம.மு.க.வின் ஆதரவை பெற இரு கட்சியினரும் கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளனர். பதவியேற்பு விழா முடிந்ததும் வெளியே வந்த உறுப்பினர்களை ஒன்று சேர்த்து தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களுடன் அழைத்து சென்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க. 7 இடங்களில் வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன. எனவே இரு கட்சிகளும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க கடுமையான முயற்சியில் இறங்கி உள்ளனர்.

    எதிர் அணியில் உள்ள உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்து எப்படியாவது பதவிகளை பிடிக்க வேண்டும் என்று ஆசை காட்டி வருவதால் இரு கட்சியினரும் தங்கள் கவுன்சிலர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து ‘கவனித்து’ வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளில் அ.தி.மு.க.-9, தே.மு.தி.க.-2, தி.மு.க.-5, காங்.-1, அ.ம.மு.க.-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைவர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தே.மு.தி.க. கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. துணைத்தலைவர் பதவி உள்பட சில முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

    தி.மு.க. கூட்டணி 6 இடங்களை பிடித்துள்ளதால் தே.மு.தி.க.வின் ஆதரவை பெற்று துணைத்தலைவர் பதவியை பிடிக்க அவர்களும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக தே.மு.தி.க. கவுன்சிலர்களை தனியார் விடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 20 இடங்களில் அ.தி.மு.க.-10, தி.மு.க.-7, சுயேட்சை-2, பா.ம.க.-1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயா அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் அவர் ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களுக்குத்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அதற்கு விஜயா மறுத்ததால் அவருடைய கையை பிடித்து இழுத்து தங்கள் கட்சிக்கு வருமாறு கட்டாயப்படுத்தினர். இதைப்பார்த்த அ.தி.மு.க.வினர் ஆத்திரம் அடைந்து தடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு- தகராறு ஏற்பட்டது.

    இதில் விஜயா மயங்கி விழுந்தார். போலீசார் அனைவரையும் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் தி.மு.க. கூட்டணியில் 17 பேர், அ.தி.மு.க.வில் 6 பேர், சுயேட்சைகள் 2 பேர் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்று விட்டு வெளியே வந்தபோது தி.மு.க. மற்றும் சுயேட்சை உறுப்பினர்களில் சிலரை இருதரப்பினர் கார்களில் ஏற்ற முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. கூட்டணி 4, அ.தி.மு.க. கூட்டணி 6 இடங்களிலும், சுயேச்சைகள் 5 பேரும் வெற்றி பெற்றனர்.

    எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வெற்றியை சுயேச்சைகள் நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் சுயேச்சைகளை இழுக்க அதிகளவில் குதிரை பேரம் நடந்தது. இந்நிலையில் சுயேச்சைகளில் 4 பேர் தி.மு.க கூட்டணி ஆதரவாளர்கள் ஆவர். இதனையடுத்து சுயேச்சைகளை விலைக்கு வாங்க அ.தி.மு.க.வினரும் முயற்சி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தபோது அ.தி.மு.க அணி ஒன்றிய கவுன்சிலர்கள் சுயேச்சை கவுன்சிலர்களை தனித்தனியாக கார்களில் பாதுகாப்புடன் கொண்டு வந்து அலுவலகத்திற்குள் விட்டனர்.

    அவர்கள் தப்பி செல்லாமல் இருக்க ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் ஆட்களை கண்காணிக்க நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் பதவியேற்பு முடிந்ததும் அ.திமு.க.வினர் அனைவரையும் தனித்தனி கார்களில் ஒன்றாக ஏற்றி கடத்தி சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கடத்தல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    கடத்தப்பட்ட கவுன்சிலர் வாசுகி.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் 8-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் வாசுகி. கடந்த 3-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் சின்னமலை சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். அதில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், தனது மனைவி வாசுகியை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பதவி ஏற்பு விழாவுக்கு வாசுகி திடீரென வந்தார். அவர் யூனியன் கவுன்சிலராக பதவி ஏற்றுவிட்டு வெளியே வந்ததும் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வாசுகி அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் துணை சூப்பிரண்டு முருகேசன் விசாரணை நடத்தினார்.

    அப்போது வாசுகி கூறுகையில், 3-ந்தேதி சிலர் தன்னை விருப்பம் இல்லாமல் அழைத்து சென்றதாகவும், குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தங்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

    இதேபோல் முதுகுளத்தூர் யூனியன் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாத்தையாவும் கடத்தப்பட்டதாக அவரது மகன் ராஜா முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதில், கவுன்சிலர் பதவி ஏற்றுவிட்டு வந்த எனது தந்தையை அ.தி.மு.க.வினர் கடத்தி சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர் யூனியனில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 4 வார்டுகளையும், சுயேட்சைகள் 7 வார்டுகளையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை மாவட்ட பஞ்சாயத்தில் 23 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 13, அ.தி.மு.க. 9, பார்வர்டு பிளாக் 1 இடங்களை பிடித்துள்ளன. இதனால் மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் 3 உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்தால் மாவட்ட பஞ்சாயத்து அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று அனைத்து உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பதவி ஏற்பு முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தனி வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் கேரள மாநிலம் மூணாறுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி யூனியனில் அ.தி.மு.க.விற்கு 9 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேட்சையாக கோவிலாங்குளம் ஊராட்சி 8-வது வார்டில் போட்டியிட்ட பொறியியல் பட்டதாரி அரவிந்த் வெற்றி பெற்றார். இவர் யூனியன் அலுவலகம் வந்து பதவி ஏற்றுக்கொண்டதும் எந்த கட்சிகளிடமும் சிக்காமல் சுவர் ஏறி குதித்து தப்பினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. 8 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    நேற்று பதவி ஏற்றுவிட்டு வெளியே வந்த 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முரளியை தி.மு.க. வினர் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் கவுன்சிலர் முரளியை தங்கள் காரில் ஏற்றி சென்றனர். பின்னர் அ.திமு.க. கவுன்சிலர்கள் 8 பேரும் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 11-ந்தேதி காலை 10 மணிக்குத்தான் ஓசூர் திரும்புவார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் மொத்தம் 25 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 11 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும், தே.மு.திக. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற மொத்தம் 13 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.

    அ.தி.மு.க.விலேயே 2 கவுன்சிலர்கள் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் கவுன்சிலர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அ.திமு.க. ஒன்றிய கவுன்சிலர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் 13 கவுன்சிலர்கள் பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக அவர்கள் வேனில் ஏறியபோது சானமாவு பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர் சம்பங்கி அ.தி.மு.க. கவுன்சிலர்களை நேரில் சந்தித்து தன் பக்கம் வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேரும் ஒரு வேனில் பாதுகாப்பாக பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர். தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் 11-ந் தேதி அன்று அவர்கள் சூளகிரிக்கு திரும்புவார்கள்.
    Next Story
    ×