search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய பெண் குழந்தைகள் தினம்
    X
    தேசிய பெண் குழந்தைகள் தினம்

    பெண் குழந்தையுடன் தாய், பாட்டி சேர்ந்து செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு- கலெக்டர்

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தையுடன் தாய், பாட்டி ஆகிய 3 தலைமுறைகளுடன் செல்பி எடுத்து போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை:

    பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    பெண் குழந்தைகளுக்கான கல்வி இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஆண்களைவிட 20 சதவீதம் பெண்கள் கல்வி அறிவில் குறைவாக உள்ளனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு கல்வி மேம்பாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் சிறுவயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்துதல், பெண் சிசு கொலை ஆகியவை அதிகம் நடக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குறிப்பாக ஜவ்வாதுமலை கிராமங்களில் விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர். கலைநிகழ்ச்சிகள் தெரு நாடகங்கள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி, 100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க நவீன வசதிக்கேற்ப பெண் குழந்தைகளை பிறப்பு, கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் புதிய திட்டங்களோடு களமிறங்கி உள்ளது.

     

    கலெக்டர்

    கடந்த 2018-ம் ஆண்டு பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுடன் உற்சாகமாக செல்பி எடுத்து அனுப்பினர். இதில் 15 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு இதேபோல் ஒரு திட்டத்தை கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதில் 3 தலைமுறை பெண்களை கவுரவிக்கும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதன்படி பெண் குழந்தை அவரது தாய், பாட்டி ஆகிய 3 தலைமுறைகளுடன் செல்பி எடுத்து போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    வருகிற 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தை உள்ளவர்கள். Beti Bachao Beti Padhao என்ற பேஸ்புக் முகவரி அல்லது 7397285643 என்ற வாட்ஸ்-அப் எண் பாட்டி, அம்மா, குழந்தை ஆகியோர் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் மேலும் அதில் பெண் குழந்தையின் முழு பெயர், பெற்றோர் பெயர், முகவரி பதிவு செய்ய வேண்டும் இதனை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இதில் சிறந்த செல்பி படம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண் குழந்தை வைத்திருப்போர் செல்பி எடுத்து அனுப்ப தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு காரணமாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது.

    2019-ம் ஆண்டு 159 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. விழிப்புணர்வு காரணமாக குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் உடனுக்குடன் வருகின்றன.

    தற்போது 3 தலைமுறை அதாவது பாட்டி, அம்மா, குழந்தை ஆகியோர் சேர்ந்து செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தாய் மட்டும் இன்றி அவரது பாட்டிக்கும் ஊக்கம் ஏற்படும்.

    செல்பி எடுத்து அனுப்பும் படங்களை சேகரித்து வைக்க திருவண்ணாமலை சமூக நலத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளபடி படங்களை தேர்வு செய்து வைப்பார்கள். அதில் சிறந்த படங்கள் கலெக்டரால் தெரிவிக்கப்படும். அவர்களுக்கு 24-ந் தேதி சான்றிதழ், கேடயம் பரிசு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×