search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த 7 பாண்லே ஊழியர்கள் சஸ்பெண்ட்

    புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த பாண்லே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே குருமாம்பட்டில் இயங்கி வருகிறது.

    இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர், மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு புதுவை முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற பால் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சாரங்கபாணி கடந்த 2 மாதமாக அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்து போடாததால் மூலப்பொருட்கள் வாங்க முடியவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து மேலாண் இயக்குனரை மாற்றக்கோரி பாண்லே ஊழியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த வாகனத்தையும் நிறுவனத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதனால் விநியோகம் செய்யவேண்டிய 60 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாண்லே பால் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

    அப்போது ஊழியர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் பாண்லே நிறுவனத்திற்கு வந்தார். அவரை ஊழியர்கள் விரட்டியடித்தனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த பாண்லே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை கூட்டுறவுத்துறை பதிவாளர் எடுத்துள்ளார்.

    இதுதொடர்பான அறிவிப்பு பெயர், விபரத்துடன் பாண்லே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
    Next Story
    ×