search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    குமரியில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 17,396 பேர் விண்ணப்பம்

    குமரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 17,396 பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 949 வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அப்போது 7 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதுபோல புதிதாக 7,200 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    அதன்பின்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இப்போது உள்ளாட்சி தேர்தல் முடிவு பெற்றதை தொடர்ந்து மீண்டும் வாக்காளர் சேர்ப்பு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு உள்ளது.

    அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் உட்பட்ட 1694 வாக்கு சாவடிகளிலும் இப்பணி நடந்தது.

    இதில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். இதற்காக வாக்கு சாவடி மையங்களில் படிவம் 6 வழங்கப்பட்டது. இப்படிவத்தை பயன்படுத்தி புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வயது சான்றிதழ் அளிக்க வேண்டும்.

    இதில் 4-ந் தேதி நடந்த முகாமில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் 727, கன்னியாகுமரி - 1232, குளச்சல் - 646, பத்மநாபபுரம் - 786, விளவங்கோடு - 689, கிள்ளியூர் - 1175 என மொத்தம் 5255 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். இது போல பெயர்களில் திருத்தம் செய்ய முகவரி மாற்றம் கேட்டும் பலர் மனு கொடுத்து இருந்தனர்.

    அடுத்து 5-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் 1449, கன்னியாகுமரி - 1829, குளச்சல் - 3083, பத்மநாபபுரம் - 1544, விளவங்கோடு - 1505, கிள்ளியூர் -2731 என மொத்தம் 12,141 பேர் மனு கொடுத்தனர். இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 17, 396 பேர் புதிதாக பெயர் சேர்க்க கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

    இந்த விண்ணப்பங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு இதில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

    இது தொடர்பான அடுத்த சிறப்பு முகாம் வருகிற 11-ந் தேதி மற்றும் 12-ந் தேதிகளில் அந்தந்த வாக்குசாவடிகளில் மீண்டும் நடக்க இருக்கிறது. இதிலும் வாக்காளர்கள் பதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×