search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோவில்
    X
    தஞ்சை பெரிய கோவில்

    காதல் ஜோடிகள் அத்துமீறல் - பெரிய கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

    தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் சில காதல் ஜோடிகள் நடந்து வருகின்றனர். இதனால் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுத்தனர்.

    அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொது செயலாளர் குரு மூர்த்தி தலைமையில் கார்த்திக்ராவ் போன்ஸ்லே மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், பக்தர்களை முகம் சுளிக்கும் வகையிலும் சில காதல் ஜோடிகள் நடந்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் இதனை தடுக்கவில்லை.

    எனவே கோவிலின் புனிதத்தை காக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், இதனை தடுக்காத காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாமன்னர் ராஜராஜசோழன் காலத்தில் செய்ததுபோல் தற்போது கும்பாபிஷேகம் செய்து ஆகம விதிகளை காக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று ராஜகோபுர கலசங்கள் சுத்தப்படுத்துவதற்காக அதனை கீழே இறக்கும் பணி நடந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் குழுவினர் மேலே ஏறி சென்று கலசங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த துறைகளுக்கு தொடர்பு இல்லாத சிலர் மேலே ஏறி சென்றுள்ளனர். அதோடு நில்லாமல் அவர்கள் செல்போனில் பெரிய கோவிலை சுற்றி படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இது விதிகளுக்கு புறம்பானது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளில்லா கேமரா மூலம் பெரியகோவிலை வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். தற்போது அதனை மாதிரி இந்த சம்பவமும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரியகோவிலின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சமூக வலைதளத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×