search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் பட்டதாரி வாலிபர்
    X
    ராமநாதபுரம் பட்டதாரி வாலிபர்

    கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டிய ராமநாதபுரம் பட்டதாரி வாலிபர்

    கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டிய பட்டதாரி வாலிபருக்கு ராமநாதபுரம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஆதம் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36). கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவருக்கு, 12 வயதில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் இடது கால் துண்டிக்கப்பட்டது. இவர் எம்.காம்., பி.எட்., பி.லிட்., எம்.பில்., பட்டங்களை பெற்றுள்ளார்.

    இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அரசு வேலைக்கு முயற்சித்து வரும் இவருக்கு, இதுவரை வேலை கிடைக்கவில்லை. இருப்பினும், சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் எனவும், தன்னாலும் சாதிக்க முடியும் எனவும் கூறி, சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    ஏற்கெனவே இவர் சிவ கங்கை-சென்னை, ராமே சுவரம்-கன்னியாகுமரி என இருமுறை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டிச் சென்று, மரம் நடுதல், நீர் நிலைகள் சீரமைப்பு, நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

    அதேபோல் கடந்த டிசம்பர் 13-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு காற்று மாசுபாட்டைத் தடுத்தல், மரம் நடுதல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்னை மெரீனா கடற்கரையில் ஜனவரி 2-ந்தேதி தனது சைக்கிள் பயணத்தை முடித்தார்.

    ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி 20 நாட்களில் சென்னை சென்றடைந்தார்.அதன்பின்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

    மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, துண்டுப்பிரசுங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். வழியெங்கும் பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் கமல்ஹாசன் போன்றோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு நடிகர் விவேக் எனது பயணத்தை முடித்து வைத்து பாராட்டினார். ஒவ்வொருவரும் பூமி தாயையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும். அதற்காக அதிக அளவில் மரம் நடவேண்டும் என்றார்.
    Next Story
    ×