search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
    X
    திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்

    தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27, 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை நீடித்தது.

    இதில் 2 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்கள் தவிர்த்து மீதம் உள்ள 513 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவியிடங்கள், 3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் தவிர்த்து 5 ஆயிரத்து 87 பதவியிடங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.

    இதேபோன்று 10 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள் தவிர்த்து மீதமுள்ள 9 ஆயிரத்து 614 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள், 76 ஆயிரத்து 712 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் விவரங்களும் வெளியிடப்பட்டன. வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ்களும் அன்றே வழங்கப்பட்டு விட்டன.

    இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட அதிகாரி முன்னிலையில் பதவி ஏற்றனர். முதலில் மூத்த உறுப்பினர் தாமாகவே பதவி ஏற்றுக்கொண்டு, மீதம் உள்ளவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க வந்த காட்சி.

    இதேபோன்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையிலும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையிலும் மூத்த உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டு, மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வார்கள். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள்.
    Next Story
    ×