
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது நொச்சிக்குப்பம். மீனவர் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 45) அ.தி.மு.க. பிரமுகர்.
அதேபகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50) தி.மு.க பிரமுகர் ஆவார். கந்தனுக்கும், கோவிந்தராஜிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் கோவிந்தராஜின் ஆதரவாளர்களான நீதிவாணன் (35), மணிமாறன் (50) ஆகியோருக்கும் கந்தனின் ஆதரவாளர்களான கார்த்திக், ரஞ்சித், சந்துரு ஆகியோருக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
அவர்கள் அரிவாள் மற்றும் கம்புகளால் தாக்கினர். இந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகர் கந்தனுக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது. அதுபோல் கோவிந்தராஜின் ஆதரவாளர்களான நீதிவாணன், மணிமாறன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த மோதலில் கந்தனுக்கு சொந்தமான கார் உடைக்கப்பட்டது. அரிவாள் வெட்டில் பலத்தகாயம் அடைந்த கந்தன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுபோல் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த நீதிவாணன், மணிமாறன் ஆகியோர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு கோட்டக்குப்பம் துணை போலீஸ்சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.