search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.
    X
    புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி.

    பாதாள சாக்கடை இணைப்பிற்கு பணம் செலுத்த தேவையில்லை- நாராயணசாமி

    பாதாள சாக்கடை இணைப்பிற்கு பணம் செலுத்த தேவையில்லை என்று புதுவை முதல்-மந்தி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வினி குமார், கலெக்டர் அருண் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    புதுவையில் கால்நடைகளை பராமரிக்கவும், வளர்க்கவும் ஒரு குழுவை உருவாக்கி கால்நடை பெருக்கத்திற்கான ஆயத்த வேலைகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாதாள சாக்கடையில் வீட்டின் கழிவுநீர் குழாய்களை இணைக்க மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.192 கோடி செலவு செய்தும், வீடுகளில் கழிவுநீர் குழாய்களை பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுக்காமல் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் புதுவை, உழவர்கரை நகராட்சியில் உள்ள 66 ஆயிரம் வீடுகள், பாதாள சாக்கடையில் கழிவுநீர் குழாய் இணைப்பு கொடுக்க ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசுக்கு ரூ.16 கோடி கிடைக்க வேண்டிய வருவாயை தள்ளுபடி செய்கிறோம். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதனால், 29 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன் பெறுவர். புதுவை நகர அமைப்பு குழு ஊழியர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இல்லாததால் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது. அத்தகைய கல்லூரிகளில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க கோரிக்கை விடுத்தனர்.

    ஆல்பா, கிருஷ்ணா, பாரதி, கணேஷ் உள்ளிட்ட 5 பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரியாக மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நகரப்பகுதியில் உள்ளாட்சி வசம் இருந்த சில குடிநீர் தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உள்ளாட்சி வசம் இருந்த குடிநீர் தொட்டிகளை பராமரிக்கும் பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×