search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவிகளை கைப்பற்றிய தம்பதிகளை படத்தில் காணலாம்
    X
    பதவிகளை கைப்பற்றிய தம்பதிகளை படத்தில் காணலாம்

    உள்ளாட்சி தேர்தலில் பதவிகளை கைப்பற்றிய தம்பதிகள்

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் கணவன், மனைவி போட்டியிட்டு வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள பள்ளபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு முருகேசன் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 842 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இவரது மனைவி வள்ளிமயில், யூனியன் 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை விட 998 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவ்வாறு ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி உள்ளனர்.

    இதேபோல ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 6-வது வார்டில் முத்துலட்சுமி என்பவர் போட்டியிட்டார்.

    இதே போல் 7-வது வார்டில் இவருடைய கணவரும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான விவேகன் ராஜ் போட்டியிட்டார். கணவன்-மனைவியான இவர்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க இளைஞரணி இணைச்செயலாளராக இருந்தவர் ஜெயக்குமார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட கட்சியில் சீட்டு கேட்டார். ஆனால், இவருக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

    இதையடுத்து, ஜெயக்குமார் பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 10-வது வார்டில் சுயேச்சையாக களம் இறங்கினார். மேலும், ஜெயக்குமார் தன்னுடைய மனைவி சண்முகப்பிரியாவையும் பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 12-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட வைத்தார். இருவருக்கும் தென்னை மரம், சின்னமாக கிடைத்தது. தேர்தலில் ஆர்வமுடன் பணியாற்றிய இவர்கள் இருவரும், தங்களை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை விட அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர்.

    உடன்குடி யூனியன் லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்ட ஆதிலிங்கம் வெற்றி பெற்றார். இதற்கிடையே, அவருடைய மனைவி தங்கலட்சுமி, உடன்குடி யூனியன் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 1,636 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    தங்கலட்சுமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட கூடுதலாக 595 வாக்குகளை பெற்றார். கணவன்-மனைவி 2 பேரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதர் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஸ்ரீதரின் மனைவி எஸ்.கீதா தி.மு.க. சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பாரதீய ஜனதா சார்பில் கு.பரமேசுவரி போட்டியிட்டார். முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் பரமேசுவரி 1,867 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு 6 தபால் ஓட்டுகள் கிடைத்தன.

    தி.மு.க. வேட்பாளர் எஸ்.கீதா 1,734 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். அவருக்கு 7 தபால் ஓட்டுகள் கிடைத்தன. பாரதீய ஜனதா வேட்பாளர் பரமேசுவரி, கீதா பெற்ற ஓட்டுகளை விட 133 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். ஒரே ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட கணவர் ஸ்ரீதர்(4-வது வார்டு) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் கணவரை தோற்கடித்து வெற்றி பெற்ற நிலையில், ஸ்ரீதரின் மனைவி கீதா(1-வது வார்டு), பாரதீய ஜனதா வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×