search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு எண்ணிக்கை
    X
    ஓட்டு எண்ணிக்கை

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் - விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நீடிப்பு

    விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நீடித்ததால், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.
    சென்னை:

    தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.

    மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

    முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின.

    ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணும் அறையில் முதலில் ஓட்டுச்சீட்டுகள் அனைத்தும் கொட்டப்பட்டு அதை பிரிக்கும் பணி நடந்தது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கான ஓட்டுச்சீட்டுகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

    கட்சி சார்பில் தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் கட்சி வாரியாக பிரிக்கப்பட்டன.

    அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சில மையங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமாக தொடங்கியது.

    ஓட்டுச்சீட்டுகளை பிரித்து எண்ண வேண்டி இருந்ததால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முதலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான முடிவுகளும், அதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான முடிவுகளும் வெளியாயின.

    கட்சி ரீதியாக தேர்தல் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்தது. இதனால் அவற்றுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது.

    ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 5,090 இடங்களில் 1,529 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதில், தி.மு.க. 688 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 37 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    இதேபோல் அ.தி.மு.க. 518 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 22 இடங்களிலும், தே.மு.தி.க. 30 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    பிற கட்சிகள் 208 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி இடங்களிலும் தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருந்தது. மொத்தம் உள்ள 515 இடங்களில் 22 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் தி.மு.க. 14 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்று இருந்தன. அ.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் கிடைத்து இருந்தன.

    9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான தேர்தலில் 3,588 இடங்களுக்கான முடிவுகளும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலில் 26 ஆயிரத்து 99 இடங்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×