search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாமதம்- உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. முறையீடு

    உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாகவும் கூறி திமுக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். 

    அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருப்பதாகவும், ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாகவும் கூறினார். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்காதததால், நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறினார்.

    அதன்படி, திமுக சார்பில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக திமுக வழக்கறிஞர் தெரிவித்தார். எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாக கூறி மனு அளிக்கப்பட்டது. 

    இந்த வழக்கை இன்று மாலையே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தால், நாளை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×