search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

    பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் படுகொலை

    பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு கார்த்திக்கும் அவரது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் ஜெயமங்கலத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது அம்பலக்காரர் சாவடி அருகே இளைஞர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கார்த்திக் உள்ளிட்ட 3 பேரும் பைக்கில் சென்றபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அது மோதலாக மாறியது. கார்த்திக்குடன் வந்தவர்களும் அந்த வாலிபர்களும் திடீரென ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். எதிர்தரப்பினர் பலமாக தாக்கியதில் கார்த்திக் நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதுபற்றி ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கார்த்திக்கின் உறவினர்கள் பெற்றோர் ஜெயமங்கலம் நான்கு ரோட்டில் திரண்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகள் அமைத்தனர். தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×