search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல் காதர் - மலர்கொடி
    X
    அப்துல் காதர் - மலர்கொடி

    ரெயில் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.26 வரை உயர்ந்துள்ளது. ரெயில் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ரெயில் கட்டணம் நேற்று நள்ளிரவு திடீரென உயர்த்தப்பட்டது. கிலோ மீட்டருக்கு ஒரு பைசா முதல் 4 பைசா வரை உயர்த்தப்பட்ட ரெயில் கட்டணம் நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது.

    சாதாரண ஏ.சி. அல்லாத ரெயில்களில் 2-ம் வகுப்பு உட்காரும் வசதி, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி, முதல் வகுப்பு டிக்கெட்டுகள் கிலோ மீட்டருக்கு ஒரு காசு உயர்த்தப்பட்டது.

    ஏ.சி. அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு உட்காரும் வசதி, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி, முதல் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப்பட்டது.

    ஏ.சி.சேர்கார் (உட்காரும் வசதி), ஏ.சி. 3-ம் வகுப்பு, ஏ.சி., 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே நேரம் புறநகர் ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. புறநகர் ரெயில்களில் சீசன் டிக்கெட் கட்டணங்களும் மாற்றம் செய்யப்படவில்லை.

    கட்டண உயர்வால் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெயில் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.26 வரை உயர்ந்துள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.315-ல் இருந்து ரூ.325 ஆகவும், 3-ம் வகுப்பு ஏ.சி. ரூ.815-ல் இருந்து ரூ.835 ஆகவும், 2-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1150-ல் இருந்து ரூ.1,170 ஆகவும் உயர்ந்துள்ளது.

    சென்னை-நெல்லை இடையே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.385-ல் இருந்து ரூ.395 ஆக உயர்ந்துள்ளது. 3-ம் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ.1,020-ல் இருந்து ரூ.1,040, 2-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1460 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை-கன்னியாகுமரி இடையே 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.430, 3-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1,330, 2-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1,595 ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.385-ல் இருந்து ரூ.395-ஆக உயர்ந்துள்ளது. 3-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1,040, 2-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1,460, முதல் வகுப்பு ஏ.சி. ரூ.2,440 ஆக உயர்ந்துள்ளது.

    பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.385-ல் இருந்து ரூ.400, 3-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1045, 2-ம் வகுப்பு ஏ.சி. ரூ.1,475 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த திடீர் கட்டண உயர்வு ரெயில் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இன்று காலை ரெயில் நிலையம் வந்த பயணிகள் கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து புரசைவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் காதர் கூறியதாவது:-

    ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை என மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் பயணச் செலவுதான் கூடுதலாகி உள்ளது. இனிமேலும் ரெயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றார்.

    நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மாதம் ஒருமுறை சொந்த ஊருக்கு செல்வேன். திடீர் கட்டண உயர்வால் எனது பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தைவிட குறைவாக இருப்பதால்தான் ரெயில் பயணத்தை பலரும் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு கட்டணத்தை உயர்த்தினால் பஸ் கட்டணத்துக்கு இணையாக ரெயில் கட்டணமும் வந்துடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மலர்கொடி (நுங்கம்பாக்கம்):-

    நான் ராமேஸ்வரம் செல்வதற்காக இன்று ரெயில் நிலையம் வந்தபோதுதான் கட்டண உயர்வை அறிந்தேன். இந்த விலை உயர்வால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனாலும் இனிமேல் கட்டணத்தை உயர்த்தக்கூடாது.

    சரவணன் (சிந்தாதிரிப்பேட்டை):- நான் திருச்செந்தூர் செல்வதற்காக டிக்கெட் எடுத்தேன். திடீரென ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15 அதிகரித்திருப்பதால் எங்கள் பயணச்செலவு கூடுதலாகி உள்ளது. இந்த கட்டண உயர்வு சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×