search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் பிப்ரவரி வரை கிடைக்கும்

    கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த மாதம் வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திரா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.

    கண்டலறு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் 2-வது தவணையாக வழங்க வேண்டிய கிருஷ்ணா நீர் செப்டம்பர் 25-ந் தேதி தாமதமாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டது.

    ஆந்திரா பகுதியில் பருவமழை கொட்டி தீர்த்ததால் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு அதிக அளவு தண்ணீர் அனுப்பப்பட்டது.

    இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் அதிகபட்சமாக 850 கனஅடி வரை திறக்கப்பட்டது.

    இதனால் வறண்டு கிடந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 350 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 1430 மில்லியன் கனஅடி தண்ணீர் உயர்ந்தது. (மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி) பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படும் என்று ஆந்திரா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த ஆண்டு இதுவரை 3.5 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் கிடைத்து உள்ளது.

    பிப்ரவரி மாதம் வரை கிருஷ்ணா நீர் திறக்கப்படும் பட்சத்தில் சுமார் 7 டி.எம்.சி.யை தாண்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஒரே தவணையாக 7.976 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கி இருந்தது. தற்போது 5 ஆண்டுக்கு பிறகு ஒரே தவணையாக 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திராவில் உள்ள சோமசீலா அணையில் 66 டி.எம்.சி.யும் (மொத்த கொள்ளளவு 73 டி.எம்.சி.), கண்டலேறு அணையில் 43 டி.எம்.சி.யும் (68 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது.

    கடந்த 15 ஆண்டுகளில் 3 அல்லது 4 முறை மட்டுமே 7 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா அரசு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மட்டும் 8 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து உள்ளது. அதிக முறை 4 முதல் 4.5 டி.எம்.சி. தண்ணீரே கிடைத்து இருக்கிறது.

    இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் ஓரளவு தண்ணீர் உள்ளதால் வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சோழவரம் ஏரியில் 69 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி), புழல் ஏரியில் 2436 மி.கனஅடி (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கம் ஏரியில் 1700 மி.கனஅடி (3645 மி.கனஅடி)யும் தண்ணீர் இருப்பு உள்ளது.

    குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளையும் சேர்த்து 5 ஆயிரத்து 635 மி.கனஅடி தண்ணீர் (5½ டி.எம்.சி.) உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×