search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொது குழு கூட்டம் நடைபெற்றது.
    X
    ராமதாஸ் தலைமையில் பா.ம.க. பொது குழு கூட்டம் நடைபெற்றது.

    ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்- பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

    ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பா.ம.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஆண்டு தோறும் புத்தாண்டு தினத்தையொட்டி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் கட்சி பணிகள், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான புத்தாண்டு சிறப்பு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கி பேசினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, ஏ.கே. மூர்த்தி, மாநில நிர்வாகிகள் தீரன், ஏழுமலை, சுப்பராயலு, செல்வகுமார், முன்னாள் எம்.பி. தன்ராஜ், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் குடிமக்கள் பதிவு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்காக ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். காவிரி- கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனம் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள ஹைட்ரோ -கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் உள்ளூர் ஒதுக்கீடு தேவை. புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×