search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    கண்ணியத்தை இழந்து தரக்குறைவாக பேச வேண்டாம்- நாராயணசாமிக்கு கவர்னர் கடிதம்

    கண்ணியத்தை இழந்து என்னைப்பற்றி தரக்குறைவாக பேச வேண்டாம் என்று முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கிரண்பேடி கவர்னராக வந்ததிலிருந்தே அவருக்கும் முதல்-அமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கவர்னரை சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    கடந்த மாதம் கவர்னரை ஹிட்லர், பேய், அரக்கன் என்று வர்ணித்து இருந்தார். அதற்கு கவர்னர் கிரண்பேடி இதுபோன்ற மோசமான வார்த்தைகளை முதல்-அமைச்சர் பயன்படுத்துவது சரியில்லை என்று கூறி இருந்தார். இதற்கிடையே நேற்று காங்கிரஸ் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவையில் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்ததற்கு கிரண்பேடி கொடுத்த நெருக்கடியே காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த கிரண்பேடி இமெயில் மூலமாக முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கவர்னரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள கவர்னர் மாளிகை மீதும் கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தரக்குறைவாக பேசி வருகின்றீர்கள்.

    கடந்த சில தினங்களாக எல்லைமீறி கண்ணியத்தை இழந்து பேசுகின்றீர்கள். புத்தர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள். குற்றச்சாட்டுகளை கூறும்போது அதை ஒருவர் ஏற்க மறுத்தால் அது குற்றம் சாட்டுபவரைத்தான் சாரும்.

    முதல்-அமைச்சர் அலுவலகம் என்ற கண்ணியத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். கவர்னர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நம்புகிறேன்.

    நாராயணசாமி

    கவர்னர் அலுவலகம் முற்றிலும் புதுவைக்கும் அதன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகின்றது. கருத்து வேறுபாடுகளை கூற கண்ணியமான இடம் உள்ளது என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். கருத்து வேறுபாடு, அந்த வழியில் செல்லுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன்.

    இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.

    Next Story
    ×