search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் விவகாரம் - அதிகாரிகளை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

    மணப்பாறை அருகே வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எலமணம் ஊராட்சி 129-வது வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறை வடைந்தது. இதையடுத்து இரவு 7 மணி அளவில் தேர்தல் அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் அந்த வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்தனர்.

    அதன் பின்னர் அரசியல் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். உடனே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அங்குள்ள தேனீர் கடைக்கு டீ குடிக்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் வைத்த இடத்திலேயே இருந்தன.

    இதனால் தி.மு.க. வினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொதுவாக சீல் வைக்கப்பட்ட பெட்டிகளை சாக்குப்பைக்குள் போட்டு மறுபடியும் சீல் வைத்து அதன் பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த வாக்குச்சாவடி மையத்தில் அந்த பணிகள் எதுவும் செய்யவில்லை.

    இதை அறிந்த வையம்பட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சபியுல்லா மற்றும் கூட்டணி கட்சியினர் அந்த வாக்குச்சாவடி மையம் முன்பு தேர்தல் அதிகாரியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் சம்பவ இடம் விரைந்து வந்தார். பின்னர் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, தேர்தல் அதிகாரி சாக்கு மூட்டையில் வைத்து சீல் வைக்க தெரியாமல் இருந்துவிட்டார். தவறேதும் நடக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும் சாக்குமூட்டையில் வைத்து சீல் வைத்தனர். இருப்பினும் அதை நம்பாத தி.மு.க.வினர் கள்ள ஓட்டு ஏதும் போடப்பட்டுள்ளதா? என அறிந்து கொள்ள பதிவான வாக்கு விபரங்களை அதிகாரிகள் வசம் இருந்த பூத் சிலிப்புகளை வாங்கி சரிபார்த்தனர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தி.மு.க.வினரின் போராட்டத்தால் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் எலமணம் அரசு கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றடைந்தது.
    Next Story
    ×