search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
    X
    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்கின் சென்னை வருகை திடீர் ரத்து

    தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரத்து செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை (28 -ம் தேதி) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. 

    வைரமுத்து மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தார். 

    இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு தன்னெழுச்சியாக உருவான ‘மி டு இயக்கம்’ ஏற்படுத்திய தாக்கத்தால் பணியிடங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிப்பதற்கென மத்திய அரசின் சார்பில் ஒரு உயர்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறையின் முன்னாள் மந்திரியும் தற்போதைய ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், பெயரளவில் அமைக்கப்பட்ட இந்த குழு ஒருமுறை கூட எந்த பாலியல் புகார் தொடர்பாகவும் விசாரிக்கவில்லை. இந்த குழுவின் தலைவராக இருந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாலியல் புகாரில் சிக்கிய கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது மிகவும் வேடிக்கையாக இருப்பதாக சின்மயி குறிப்பிட்டிருந்தார்.

    சின்மயி டுவிட்

    இதற்கிடையில், கடந்த ஆண்டில் ஆண்டாள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க வந்தால் காட்டாங்குளத்தூரில் உள்ள அந்த தனியார் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் அருகே மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதாக இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி ஆகியவை அறிவித்திருந்தன.

    இந்நிலையில், இந்த பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதை  ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ள பதிவில் ‘தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுகளை கவுரவிக்கும் வகையில் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் விழாவில் பங்கேற்பதை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரத்து செய்துள்ளார் என அறிய வருகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×